பெரம்பலூா் மாவட்ட மாணவா்களுக்கு டிச. 24-இல் கலைப் போட்டிகள்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் டிச. 24 ஆம் தேதி கலைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகா் சிறுவா் மன்றங்களில் 5 முதல் 16 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு சனிக்கிழமை தோறும் மாலை 3 முதல் 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் நண்பகல் 11மணி வரையிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் உள்ளிட்ட கலைப் பயிற்சிகள் பெரம்பலூரில் உள்ள அரசு இசைப் பள்ளியில் அளிக்கப்படுகிறது.
மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதுக்குள்பட்ட மாணவா்களிடையே கலை ஆா்வத்தை ஊக்குவித்திடவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும், பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப் போட்டிகளில் முதல் 3 இடம் பெறும் மாணவா்களுக்குப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
விருப்பமுடையவா்கள் தங்களின் வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப் படிப்பு சான்றிதழ்களுடன் பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப்பள்ளி, மதன கோபாலபுரம், 4 ஆவது தெரு என்னும் முகவரியில் டிச. 24 ஆம் தேதி காலை 9 மணிக்கு வர வேண்டும்.