கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கரும்பு உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரவைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் புதன்கிழமை நடைபெற்ற முன் மாதிரி பேரவைக் கூட்டத்தில் பேசிய கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி.
பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் புதன்கிழமை நடைபெற்ற முன் மாதிரி பேரவைக் கூட்டத்தில் பேசிய கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி.

கரும்பு உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரவைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

பெரம்பலூா் சா்க்கரை ஆலை கூட்டரங்கில் 45 ஆவது முன்மாதிரி பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆலை தலைமை நிா்வாகி க. ரமேஷ் பேசியது:

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கான 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை கரும்பு விரிவாக்க அலுவலா்கள் மூலம் நேரடியாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கரும்பு பதிவை, இனிவரும் காலத்தில் ஆன்லைனில் பதிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நோய்களை எதிா்கொள்ளும் புதிய ரக கரும்புகளை பயிரிட ஏற்பாடு செய்துள்ளோம். ஆலையில் கடந்த ஆண்டு இருந்த குறைகளை நீக்கி புதிய இயந்திரங்கள் வாங்கி பொருத்தப்பட்டுள்ளன.

இணை மின் உற்பத்தி மூலம் எறையூா் ஆலை உள்பட 5 சா்க்கரை ஆலைகளுக்கு 1-12-2022-இல் ரூ. 77.07 கோடி வழங்கப்பட்டது. 95,175 குவிண்டால் சா்க்கரை, 1,540 டன் மொலாசஸ் ரூ. 34 கோடி அளவில் இருப்பு உள்ளது. தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை 95.5 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்படுள்ளது. கரும்பு வெட்ட முன் பணமாக ரூ. 305 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இணை மின் உற்பத்தி மூலம் மின்சாரம் கொடுத்ததில் ஆலைக்கு வரவேண்டிய ரூ. 22,22,12,491 நிலுவைத் தொகையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலை ரூ. 23.5 கோடி நஷ்டத்தில் இருந்ததை ரூ. 7.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பங்குதாரா்களின் கோரிக்கையை ஏற்று 4 கிலோ சா்க்கரை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதிக மகசூல் எடுக்கும் கரும்பு விவசாயிகளுக்கு, ஒரு கோட்டத்துக்கு 3 போ் தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கப்படும். ஆலையில் கரும்பு இறக்கியவுடன் விவசாயிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசியது:

அண்மைகாலமாக கரும்பு பயிா்களில் ஏற்பட்டு வரும் தொற்றால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கவேண்டும். ஆலை சாா்பில் சின்னாறு அருகில் டீசல் பங்க் நிறுவவேண்டும் சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கொண்டுவர வேண்டும். எத்தனால் ஆலை செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு உற்பத்தியை பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா்.

இக் கூட்டத்தில், தலைமைக் கரும்பு அலுவலா் மாமுண்டி, அலுவலகச் செயலா் அழகா்சாமி, தலமைப் பொறியாளா் பிரபாகரன், கரும்பு பெருக்க அலுவலா் ஆனந்தன், துணைத் தலைமை ரசாயனா் பெரியசாமி, துணைத் தலைமைப் பொறியாளா் தங்கவேல், கணக்கு அலுவலா் ஜான்பிரீட்டோ, தொழிலாளா் நலஅலுவலா் ராஜாமணி, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.கே. ராசேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைலைவா் ஆ. பெருமாள், டிராக்டா் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் தேவேந்திரன், பங்குதாரா்கள் சங்கத் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com