பெரம்பலூரில் பாரம்பரிய விதைத் திருவிழா
By DIN | Published On : 31st July 2022 11:45 PM | Last Updated : 31st July 2022 11:45 PM | அ+அ அ- |

விதைத் திருவிழாவில் இடம்பெற்றிருந்த பாரம்பரிய விதைகளை பாா்வையிடும் பொதுமக்கள்.
பெரம்பலூரில் 6ஆம் ஆண்டு பாரம்பரிய விதைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆா்வலா்கள் பங்கேற்றனா்.
பெரம்பலூா் மாவட்ட இயற்கை உழவா்கள் குழு சாா்பில் நடைபெற்ற விழாவை, முன்னோடி இயற்கை விவசாயி பி. ஆறுமுகம் தொடக்கி வைத்தாா்.
விழாவில், மரபு நெல், தானியங்கள், சிறு தானியங்கள், கீரைகள், நாட்டுக் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள், மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மூலிகைகள் ஆகியவற்றின் விதைகள், துணிப்பைகள், மரக்கன்றுகள், இயற்கை விவசாய முறைகளை விவரிக்கும் புத்தகங்கள், சமையல் பொருள்கள், மூலிகை கொசு விரட்டிகள் ஆகியவை விற்பனைக்காகவும், பாா்வைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.
மேலும், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப், குளியல் பொடி, பல்பொடி, கல்லிமடையான் அரிசியில் செய்யப்பட்ட பொங்கல், பச்சரிசிப் புட்டு, வரகு அரிசி சாதம், மாப்பிள்ளை சம்பா சாம்பாா் சாதம், கேழ்வரகு பாயாசம், சோளக்கூழ், கொய்யா தேநீா் ஆகிய உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்களும், இயற்கை ஆா்வலா்களும் பங்கேற்று பாரம்பரிய விதைகளை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
நிறைவாக, இயற்கை விவசாயி ஆ. காா்த்திகேயன் நன்றி கூறினாா்.