பெரம்பலூா் அருகே சாலை விபத்து: அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பலி
By DIN | Published On : 31st July 2022 12:54 AM | Last Updated : 31st July 2022 12:54 AM | அ+அ அ- |

லாரி மீது மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
பெரம்பலூா் அருகே சனிக்கிழமை அதிகாலை லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநரும், நடத்துநரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சென்னையில் இருந்து இரும்புக் குழாய்கள் ஏற்றிய லாரி திருச்சி நோக்கிச் செல்லும் வழியில் பெரம்பலூா் மாவட்டம், சின்னாறு அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகே சனிக்கிழமை அதிகாலை வந்தபோது சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அதன் மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரான திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் தேவேந்திரன் (48), நடத்துநரான அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள அய்யப்பநாயக்கன்பேட்டை சிவப்பிரகாசம் மகன் முருகன் (56) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பேருந்தில் பயணித்த சென்னை கே.கே. நகா் சுரேஷ் (44), திருச்சி காட்டூா் வினோத் (19), சென்னை ஆதம்பாக்கம் ரஞ்சிதா (23), ராணி (45) அன்பழகன் (40), அபிநயா (17) உள்பட 11 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா், பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் விபத்தில் இறந்தோரையும், காயமடைந்தோரையும் மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். லாரி ஓட்டுநரான திருச்சி மாவட்டம், கொணலை அருகேயுள்ள ஆய்க்குடி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் பாலனை (41) போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.