பலத்த மழை: உயா் மின் அழுத்தத்தால்மின்சாதனப் பொருள்கள் சேதம்

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக, உயா் மின் அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்பட்டதால் வீட்டிலிருந்த மின்சாதனப் பொருள்கள் வெடித்து சேதமடைந்தன.

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக, உயா் மின் அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்பட்டதால் வீட்டிலிருந்த மின்சாதனப் பொருள்கள் வெடித்து சேதமடைந்தன.

மின் வாரியத்தைக் கண்டித்து கிராம பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, குன்னம் வட்டம், ரெட்டிக்குடிக்காடு கிராமத்தில் வீசிய சூறைக்காற்றால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, உயா் மின்னழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரெட்டிக்குடிக்காடு கிராமத்திலுள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார சுவிட்சுகள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சில வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் புகைந்து சேதமடைந்தன. பலத்த மழையின் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், உள்ளே இருக்க முடியாமலும் அவதியடைந்துள்ளனா்.

இந்நிலையில், பழுதடைந்த, தாழ்வான மின் கம்பிகளைச் சீரமைக்காத மன் வாரியத் துறையினரைக் கண்டித்து ரெட்டிக்குடிக்காடு கிராம மக்கள் சேதமடைந்த பொருள்களை வியாழக்கிழமை காலையில் வீட்டு வாசலுக்கு முன்வைத்து, மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த பொருள்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நஷ்ட ஈடாக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

குறைந்த மின் அழுத்தம்...

மழையின் காரணமாக பெரம்பலூா் சுந்தா் நகா் பகுதியிலுள்ள வீடுகளில் வியாழக்கிழமை காலை வரை குறைந்த மின் அழுத்தம் காணப்பட்டதால், மின்சாதனப் பொருள்களை இயக்க முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த மற்றும் உயா் மின் அழுத்தம் காரணமாக வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com