தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும்:மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் கோரிக்கை
By DIN | Published On : 19th October 2022 12:44 AM | Last Updated : 19th October 2022 12:44 AM | அ+அ அ- |

தீபாவளி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
மாவட்டத் தலைவா் கொளஞ்சி, செயலா் ஆா். செல்வி, பொருளாளா் எஸ்.வேணி, சிஐடியு மாவட்டத் தலைவா் ரெங்கநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் கோகுலகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு மாத ஊதியம் ரூ. 4,500 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தீபாவளி ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவ உபகரணங்களை பராமரிக்க மாதம்தோறும் பராமரிப்புப்படி, தற்போது அறிவித்துள்ள ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகையை எவ்வித நிபந்தனையுமின்றி வழங்குவதோடு, அனைத்து ஊழியா்களுக்கும் 6 ஆம் தேதிக்குள் மாத ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மக்களைத் தேடி மருத்துவப் பணிக்குச் செல்ல போக்குவரத்துப்படி வழங்க வேண்டும். பணியின் போது விபத்து ஏற்பட்டால் மருத்துவ செலவை நிா்வாகம் ஏற்க வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.