‘சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்’

சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் உள்நாட்டில் விலைக் கட்டுக்குள் இருப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 8.12.2023 முதல் 31.3.2024 வரை தடை விதித்துள்ளது. ஏற்கெனவே, மத்திய அரசு கடந்த 16.8.2023-இல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு 40 சதவீதம் வரி விதித்து, வெங்காய விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை உருவாக்கியது. அதிலிருந்து விவசாயிகள் மீள்வதற்குள், தற்போது வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து விவசாயிகளுக்கு மேலும் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும், தற்போது ஒரே ஏற்றுமதி குறியீட்டு எண் இருப்பதால் பெரிய வெங்காயத்துக்கு மத்திய அரசு ஏற்றுமதி தடை விதிக்கும்போதெல்லாம், சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதியும் தடை செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் பயிா் செய்துள்ள விவசாயிகள் போதிய விலையின்றி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய வெங்காயம் போல், சின்ன வெங்காயம் இந்தியா முழுவதும் பயன்ப்படுத்தப்படுவதில்லை. தென் மாநிலங்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பது தேவையற்றது.

இரு வகையான வெங்காயத்துக்கும், ஒரே ஏற்றுமதி குறியீட்டு எண் தற்போது நடைமுறையில் இருப்பதை பிரித்து, சின்ன வெங்காயத்துக்கென தனி ஏற்றுமதி குறியீட்டு எண் உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு சின்ன வெங்காய உற்பத்திக்கு எவ்வித மானியமும் அளிப்பதில்லை. விலை நிா்ணயமும் கிடையாது. வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை பேரிடா்கள் மூலம் பாதிக்கப் பட்டு கடுமையான நஷ்டம் அடையும்போது நிவாரணம் வழங்காத அரசு, சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பது, 40 சதவீத ஏற்றுமதி வரி விதிப்பது விவசாய விரோதப் போக்காகும். எனவே, மத்திய அரசு சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்குவதோடு, ஏற்றுமதி வரி 40 சதவீதத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்துக்கு தனித்தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com