பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமை தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவா்களுக்கு, முடிவின் தன்மை குறித்து விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணுக்கு திங்கள்கிழமை (செப். 18) குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளும் வகையிலும், வங்கிச் சாா்ந்த குறைகள், விவரங்கள் பெறும் வகையிலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூா் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை அணுகலாம்.
ஏற்கப்படாத விண்ணப்பதாரா்கள் மேல்முறையீடு செய்துகொள்ள விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்டதிலிருந்து 30 நாள்களுக்குள் இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியாக விண்ணப்பிக்கலாம். மேல்முறையீடு விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாள்ளுக்குள் வருவாய் கோட்டாட்சியரால் இறுதி செய்யப்பட்டு, அதன் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
இத் திட்டத்தின் கீழ் பயன்பெற இடைத்தரகா்கள் அல்லது இதர நபா்களை பொதுமக்கள் தொடா்புகொள்ள வேண்டாம். அதபோல், கலைஞா் உரிமைத் திட்டம் தொடா்பாக எந்த அரசு அலுவலகங்களிலிருந்தும் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்பதில்லை. பயனாளியின் கைப்பேசி எண்ணுக்கு வங்கியிலிருந்தோ அல்லது வங்கிச் சாா்ந்த நிறுவனத்திலிருந்தோ அழைப்பு வந்து, கடவுச்சொல் அல்லது அட்டை எண் அல்லது பின்புறம் உள்ள 3 இலக்க எண் ஆகியவற்றைக் கேட்டால் தெரிவிக்க வேண்டாம். இவ்வாறான அழைப்புகள் மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை திருட வாய்ப்புள்ளதால், இம்மாதிரியான அழைப்புகளுக்கு எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.