சீரூடை பணியாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 17th April 2023 12:29 AM | Last Updated : 17th April 2023 12:29 AM | அ+அ அ- |

சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் காவலா் மற்றும் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிக்காட்டுதல் மையம் சாா்பில், இம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் 2 ஆம் நிலைக் காவலா் (காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறை) மற்றும் நேரடி உதவி ஆய்வாளா் (சட்டம் - ஒழுங்கு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படை) ஆகியத் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில், ஏப். 19 ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடைபெற உள்ளது. மதியம் 1.30 மணி வரை பயிற்சி நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட தனிப்பிரிவு (94981 00690), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை (7990 55913) தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.