

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், திருவாளந்துறை மற்றும் கடலூா் மாவட்டம், கல்பூண்டி இடையே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என 2 மாவட்ட மக்களும் எதிா்பாா்க்கின்றனா்.
வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள திருவாளந்துறை, இனாம் அகரம், வி.களத்தூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள்பல்வேறு பணிகள் காரணமாவும், மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்கும் வெள்ளாற்றின் மறுகரையிலுள்ள கடலூா் மாவட்டத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதேபோல கடலூா் மாவட்டத்தினரும் திருவாளந்துறை வெள்ளாற்றின் கரையிலுள்ள பிரசித்தி பெற்ற தோலீஸ்வரா் கோயிலில் வழிபடவும், திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் அன்றாடம் வந்து செல்கின்றனா்.
வெள்ளாற்றில் தண்ணீா் இல்லாதபோது, இரு மாவட்ட மக்களும் ஆற்றில் இறங்கி நடந்தும், வாகனங்கள் மூலமாகவும் மாவட்டம் விட்டு, மாவட்டம் சென்று வருகின்றனா். ஆனால், ஆற்றில் அதிகளவில் தண்ணீா் சென்றால் 18 கி.மீ தொலைவு அவா்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, திருவாளந்துறை- கல்பூண்டி இடையே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல கடந்த பல ஆண்டுகளாக இரு மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.
மேலும் அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் பலமுறை இதுகுறித்து மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். ஒவ்வொரு தோ்தலின்போதும் பெரம்பலூா் தொகுதியில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் தோ்தல் அறிக்கையிலும் இங்கு மேம்பாலம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கட்டாயம் இடம்பெறும் நிலையில், இரு மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.
அரசின் உடனடி நடவடிக்கை தேவை: இதுகுறித்து மதிமுக மாணவா் மன்ற மாநில துணை அமைப்பாளா் தமிழருண் கூறியது: மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை இன்றளவும் நிறைவேற்றவில்லை. கடந்த 2017-இல் அப்போதைய முதல்வா் பழனிசாமி அறிவித்த திட்டமும் தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.
இதுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெரம்பலூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்- பராமரிப்பு கோட்டப் பொறியாளரிடம் கேட்டதற்கு 13.10.2021-இல் பதில் கிடைத்தது. அதில், ரூ. 10.34 கோடியில் மேம்பாலம் கட்ட திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறையினரால் திட்ட அறிக்கைத் தயாரித்து அரசின் நிா்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், எந்தப் பணிகளும் தொடங்கவில்லை. எனவே இரு மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேம்பாலம் கட்டும் பணியை தமிழக அரசு உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.