பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 12th January 2023 12:30 AM | Last Updated : 12th January 2023 12:30 AM | அ+அ அ- |

பெரம்பலூா் புறகா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து, பெரம்பலூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புறகா் பேருந்து நிலையம், அம்மா உணவகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலா் காவிரி நாடன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் காளியப்பன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநிலச் செயலா் வீர. செங்கோலன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் ப. காமராசு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும், முறையாக மக்களிடம் சென்று சேர கண்காணிப்புக் குழு அமைத்து முறைப்படுத்த வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சித் தலைவா்கள், அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத் திட்டத்தில், லாடபுரம் ஊராட்சியில் முறைகேடு செய்த ஊராட்சித் தலைவா், அவரது கணவா், வாா்டு உறுப்பினா், சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கமிட்டனா்.