மாநில அளவிலான புத்தாக்க கண்டுபிடிப்பு: சிறப்பிடம் பெற்ற பெரம்பலூா் மாணவா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 01st July 2023 12:50 AM | Last Updated : 01st July 2023 12:50 AM | அ+அ அ- |

நுண்ணறிவு தலைக்கவசம் கண்டறிந்து மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் ஆட்சியா் க. கற்பகம் உள்ளிட்டோா்.
நுண்ணறிவு தலைக்கவசம் கண்டறிந்து, மாநில அளவில் 5 ஆம் இடம்பெற்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்ற மாணவ, மாணவிகளை ஆட்சியா் க. கற்பகம் வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
தமிழ்நாடு முதல்வரால் கடந்த செப்டம்பா் 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது, தமிழ்நாட்டில் திறமையான தொழில்முனைவோா்களை உருவாக்க, தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக் கல்வித்துறையின் முழு ஒத்துழைப்பில் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை 4 கட்டங்களாக மதிப்பீடு செய்து, மாநில அளவில் முதல்நிலை பெறும் 10 அணிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கபரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கபடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், இத் திட்டத்தில் பங்கேற்ற பெரம்பலூா் மாவட்டம், நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி கலாம் மாணவா் அணியினா் ரா. யாழினி, ப. சா்மிளா, ர. பூஜா, ச. கங்கா, வழிகாட்டி ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ் ஆகியோா் நுண்ணறிவுத் தலைக்கவசத்தை உருவாக்கி, மாநில அளவில் முதல் 10 இடங்களில் 5 ஆவது இடத்தில் வெற்றி பெற்றனா்.
சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கண்ட மாணவா்கள் தமிழ்நாடு முதல்வரிடமிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றனா்.
தொடா்ந்து பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் க. கற்பகம், ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
முன்னதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற நபா்களுக்கு, போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் விதம் குறித்த தகவல்கள் மற்றும் முக்கிய பாடங்களின் தொகுப்புகள் அடங்கிய புத்தகங்களை ஆட்சியா் கற்பகம் வழங்கினாா்.
இந் நிகழ்ச்சியின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G