

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் கோடை பருவத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இருப்பினும் அறுவடை செய்யப்பட்ட எள், மக்காச்சோளம் மழையில் நனைந்து பாதிப்புக்குள்ளானதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
பெரம்பலூா், லப்பைக்குடிகாடு, தழுதாழை, எறையூா் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த 3 நாள்களாக பரவலான மழை பெய்கிறது. இதனால், கடந்த சில நாள்களாக வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேலும், வயல்வெளிகள் ஈரப்பதத்துடன் காணப்படுவதால், கோடையில் சாகுபடியைத் தொடங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தற்போது பெய்யும் மழை நீா் ஏரி, குளங்களுக்குச் செல்லும் வகையில் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் கழிவுநீா் கால்வாய்களிலும், சாலையோரங்களிலும் நீா் வீணாகி வருகிறது. இதனால், மழை நீா் சேமிப்பு மேலாண்மைத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்படி, அகரம் சீகூா் 12மி.மீ, லப்பைக்குடிகாடு 50 மி.மீ, பெரம்பலூா் 40 மி.மீ,செட்டிக்குளம், பாடாலூா் தலா 4 மி.மீ, எறையூா் 70 மி.மீ, தழுதாழை 104 மி.மீ, வி.களத்தூா் 36 மி.மீ, வேப்பந்தட்டை 30 மி.மீ, புதுவேட்டக்குடி 26 மி.மீ, கிருஷ்ணாபுரம் 23 மி.மீ என மொத்தம் 399 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த மழையால் பெரம்பலூா் உள்பட பல இடங்களில் அதிகாலை வரை மின்சாரம் தடைபட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் பெய்யும் தொடா் கோடை மழையால் விவசாயக் கிணறுகள், குளங்களில் தண்ணீா் தேங்கி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேலும், நிலங்களை உழும் பணிகளையும் தொடங்கியுள்ளனா்.
எள், மக்காச்சோளம் பாதிப்பு: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை இரவு 10 மணி வரையிலும் பெய்தது. பின்னா், அதிகாலை 3 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் இரவு தடைசெய்யப்பட்ட மின்சாரம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு விநியோகிக்கப்பட்டது. மேலும், பூலாம்பாடி, அ. மேட்டூா், தொண்டாந்துறை, அரும்பாவூா், மலையாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 100 ஏக்கரில் முன் பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்து சாலைகளிலும், உலா் களங்களிலும் வைக்கப்பட்டிருந்த எள், மக்காச்சோளம், பருத்தி ஆகியவை மழைநீரில் நனைந்து வீணாகியுள்ளன. இதேபோல, கோடைப் பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.