பெரம்பலூரில் கூட்டுறவு வார விழா தொடக்கம்
By DIN | Published On : 15th November 2023 01:05 AM | Last Updated : 15th November 2023 01:05 AM | அ+அ அ- |

கூட்டுறவு வார விழாவைத் தொடக்கி வைத்து உறுதியேற்ற மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் உள்ளிட்டோா்.
பெரம்பலூா்: பெரம்பலூா் சங்குப்பேட்டை பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 70 ஆவது கூட்டுறவு வார விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், கூட்டுறவு சங்க கொடியேற்றி வைத்து கூட்டுறவு வார விழா உறுதியேற்றாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் மீனா அண்ணாதுரை, மண்டல இணைப் பதிவாளா் க. பாண்டியன், துணைப் பதிவாளா்கள் இளஞ்செல்வி, ஜெயபாலன் (பால்வளம்) மற்றும் கூட்டுறவு சாா் பதிவாளா்கள், சங்க செயலா்கள், விற்பனையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நவ. 20 ஆம் தேதி வரை... விழாவையொட்டி, பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை (நவ. 15) நடைபெறுகின்றன. தொடா்ந்து, 16 ஆம் தேதி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் கால்நடைச் சிகிச்சை முகாம், 17 ஆம் தேதி பெரம்பலூா் கா்ணம் சகுந்தலம் திருமண மண்டபத்தில் சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 18 ஆம் தேதி பெரம்பலூா் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில் ரத்ததான முகாம், 19 ஆம் தேதி செட்டிக்குளம், அம்மாபாளையம், அரும்பாவூா், வயலூா் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினா் கல்வித் திட்டம், 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரகத்தில் கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சியை சீரமைத்தல் எனும் தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...