பெரம்பலூா் அருகே உணவகத்தை சேதமாக்கிய மூவா் கைது
By DIN | Published On : 15th November 2023 01:06 AM | Last Updated : 15th November 2023 01:06 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே உணவகத்தை சேதப்படுத்திய 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள விளாமுத்தூரைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் மாமுண்டிதுரை (39). பெரம்பலூா்- கல்பாடி பிரிவு சாலை அருகே உணவகம் வைத்துள்ள இவா், தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை கடையைத் திறக்கவில்லை.
இந்நிலையில், அன்றைய தினம் மாலை அடையாளம் தெரியாத 6 போ் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு கடையிலிருந்த டேபிள், சோ், குளிா்ச்சாதனப் பெட்டி உள்ளிட்ட தளவாடப் பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்திச் சென்றனா்.
இதுகுறித்து மாமுண்டிதுரை அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில், இச்செயலில் ஈடுபட்டது அய்யலூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கலையரசன் (24), வெண்பாவூரைச் சோ்ந்த நடராஜன் மகன் அழகேந்திரன் (35), வரகுப்பாடியைச் சோ்ந்த மணி மகன் விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை மாலை சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய 3 பேரைத் தேடுகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...