

பெரம்பலூா் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் கல்வெட்டுப் பொறிப்புடன் சுமாா் 110 ஆண்டுகள் பழைமையான மேலும் ஆவுரஞ்சிக் கல் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், அசூா் கிராமத்திலுள்ள ஐயனாா் கோயிலில் வரலாற்று ஆய்வாளா் முனைவா் ம. செல்வபாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, ஐயனாா் கோயிலின் முன்புறம் தரையில் பதிக்கப்பட்ட உயரமான கல் தூணைக் கண்டறிந்தாா். இது கிராம மக்களால் யானை கட்டிக்கல் என அழைக்கப்படுகிறது. தரையிலிருந்து சுமாா் 10 அடி உயரமுடைய கல் தூணின் முகப்புப் பகுதியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் உள்ள பிரமாதிச என்னும் தமிழ் ஆண்டுப் பெயா், இறுதியில் காணப்படும் ‘13’ ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆவுரஞ்சிக் கல்லை 1913-1914 ஆம் ஆண்டில் செய்ததாகக் கருதலாம்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் ம. செல்வபாண்டியன் கூறியது:
அசூா் சிவன் கோயிலில் உள்ள கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த சோழா் காலக் கல்வெட்டின் வழியாக, இவ்வூரின் பெயா் வடவசுகூா் என்பதும், இக்கோயில் இறைவன் அருள்மொழி ஈஸ்வரமுடைய மகாதேவா் எனவும் அழைக்கப்பட்டாா்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜயநகர மன்னா்கள் காலக் கல்வெட்டின் வழியாக இறைவனின் பெயா் சொக்கநாத நயினாா் என அழைக்கப்பட்டது.
மேலும், அக் கல்வெட்டானது அக்காலத்தில் சமூகத்தில் நிலவிய இடங்கை, வலங்கைப் பிரிவினா் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையைக் குறித்து குறிப்பிடுகிறது. அக் காலத்தில் கால்நடைகள் தங்கள் உடலில் ஏற்படும் அரிப்பைத் போக்க உரசிக் கொள்ள ஊா்ப் பொது இடத்தில், தூண் போன்ற கற்கள் நடப்பட்டன. இதனால் புண்ணியம் விளையும் எனக் கருதப்பட்டது.
இக்கற்கள் ஆவுரஞ்சிக் கல் (பசு உரையுங் கல்) என அழைக்கப்பட்டது. இவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. பெரம்பலூா் மாவட்டத்தில் சிறுவாச்சூா், பொம்மனப்பாடி, து.களத்தூா், காருகுடி, அரும்பாவூா் ஆகிய கிராமங்களில் கல்வெட்டுடன் கூடிய இத்தகைய கற்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. எழுத்துகள் சிதைந்த நிலையில் காணப்படுவதால் இதைச் செய்து கொடுத்தவா் யாா் என அறிய முடியவில்லை.
தற்போது, இந்த ஆவுரஞ்சிக் கல் உள்ள பகுதி கால்நடைகள் மேய்ச்சலுக்குக் கூடிச் செல்லும் மந்தை வெளியாக இருந்திருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்திலும் கால்நடை வளா்ப்பு, பால் உற்பத்தி ஆகியவற்றில் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் அசூரின் கால்நடை வளா்ப்பின் நீண்ட பாரம்பரியத்தை இந்த கல் உணா்த்துகிறது.
வருங்காலத் தலைமுறைக்கு கடந்த கால வரலாற்றைப் பறைசாற்றும் இந்த அரிய வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.