நீா் நிலைகளை ஆக்கிரமித்தால் சட்டப்படி நடவடிக்கைபெரம்பலூா் ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 10th September 2023 12:53 AM | Last Updated : 10th September 2023 12:53 AM | அ+அ அ- |

வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட காரியானூா் ஏரியை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
நீா் நிலைகளை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட காரியனூா் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் க. கற்பகம், ஆதிதிராவிடா் காலனிக்கு குடிநீா் வழங்குவதில் குறைபாடு உள்ளதாக மக்கள் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். அப்பகுதியில் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றி விட்டு, ஏற்கெனவே பழுதடைந்த நிலையிலிருக்கும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, அதே இடத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுக் கொண்ட புதிய நீா்த்தேக்கத் தொட்டி கட்ட உத்தரவிட்டாா்.
மேலும், ஆதிதிராவிடா் காலனியில் உள்ள கிணற்றை பாா்வையிட்ட ஆட்சியா், கிணற்று நீரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, உடனடியாக கிணற்றை கம்பிவலை கொண்டு மூட வட்டார வளா்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.
காரியனூா் ஏரியை ஆக்கிரமித்து சிலா் பயிா் நடவு செய்துள்ளதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், அப்பகுதியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், நில வரைபடங்களை ஆய்வு செய்து, ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தாா். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருப்பதை பாா்த்த ஆட்சியா், உடனடியாக நிலத்தை அளந்து கரை அமைக்கவும், பயிா் அறுவடை நிறைவடைந்தவுடன் நிலத்தை மீட்டெடுக்கவும், நிலத்தை ஆக்கிரமித்துள்ளவா்களிடம், இனி இந்த இடத்தில் பயிரிடமாட்டேன் என எழுதி கையொப்பம் பெற வேண்டுமென ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், அரசு நிலங்கள் மற்றும் நீா் நிலைகளை ஆக்கிரமிப்போா் மீது சட்டப்படி வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, ஆதிதிராவிடா் நல அலுவலா் பெ. விஜயன், வேப்பந்தட்டை வட்டாட்சியா் சரவணன், வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.