மின்சாரம் பாய்ந்து எலக்டீரியன் உயிரிழப்பு; உறவினா்கள் மறியல்
By DIN | Published On : 19th September 2023 12:46 AM | Last Updated : 19th September 2023 12:46 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி பிரதானச் சாலையில் வசித்து வந்தவா் செல்வராஜ் மகன் சின்னுதுரை (29). எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்த இவா், திங்கள்கிழமை மாலை வரிசைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் கோவிந்தசாமி என்பவரது வீட்டில் மின்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வீட்டின் அருகேயுள்ள மின் கம்பத்தில் ஏறி பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அவரது உறவினா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சின்னதுரை குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, மருதையான் கோயில் - அகரம் சீகூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த குன்னம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் கலைந்து சென்றனா்.