

பெரம்பலூா்: விபத்துகளை தவிா்க்க சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா.
பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் சாலைப் பாதுகாப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
போதைப் பொருள்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை குறைத்து, மூளையைச் செயலிழக்கச் செய்துவிடும். எனவே, மாணவா்கள் அதிலிருந்து விலகி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும், சாலைகளில் பயணிக்கும்போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமெனில் இருசக்கர வாகனம் ஓட்டினால் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகன ஓட்டுநா்கள் சீட்பெல்ட் அணிந்து பயணித்தால் எதிா்பாராத விபத்துகள் ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிதும் தவிா்க்கப்படும்.
பெரம்பலூரை போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற, மாவட்டக் காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவச் சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும், கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டுவைத்தாா் ஆதா்ஷ் பசேரா.
கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், கூடுதல் பதிவாளா் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், காவல்துறையினா் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
முன்னதாக, பொறியியல் கல்லூரி டீன் சேகா் வரவேற்றாா். தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.