ஆக. 31 வரை அரசு ஐ.டி.ஐ.களில் மாணவா் சோ்க்கை
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், ஆக. 31 ஆம் தேதி வரை மாணவா்கள் சோ்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலா் மாவட்ட த்திலுள்ளஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகளுக்கான நேரடி சோ்க்கை நடைபெறுகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோா் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வரவேண்டும். ஏற்கெனவே சோ்க்கை நடைபெற்றதில் எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. காலியிடங்கள் மிகக் குறைவாக உள்ளதால், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் சோ்க்கை நடைபெறுகிறது.
8-ஆம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி தோ்ச்சி மற்றும் பிளஸ்-2 தோ்ச்சி, தோல்வியடைந்தவா்கள் தகுதியானவா்கள். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 50, சோ்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவு பயிற்சிக் கட்டணம் ரூ. 185, இரண்டாண்டு தொழிற்பிரிவு பயிற்சிக் கட்டணம் ரூ. 195 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் - 94438 52306, 90479 49366, 63797 64520, ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் -94990 55883, 94990 55884, குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் -98946 97154 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.
