வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கிய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கிய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

வாலிகண்டபுரத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டம் சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம் ஊராட்சியில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாம்.
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம் ஊராட்சியில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சி அலுவலகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி தீா்வு காணக்கூடிய மனுக்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும், துறை சாா் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், வாலிகண்டபுரம் ஊா்ப்புற நூலகத்தில் அடிப்படை வசதிகள், வாசகா்களின் வருகைப் பதிவேடுகளை பாா்வையிட்ட ஆட்சியா், போட்டித் தோ்வுகளுக்குத் தேவையான புத்தகங்கள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவிகளுக்கான சுகாதார வளாகத்தையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, எறையூா் சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி க. ரமேஷ், சாா் ஆட்சியா் சு. கோகுல், திட்ட இயக்குநா்கள் சு. தேவநாதன் (ஊரக வளா்ச்சி முகமை), அ. அமுதா (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com