பெண் தலைவா்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை: விஜய பிரபாகரன்
பெரம்பலூா்: தமிழகத்திலுள்ள பெண் தலைவா்களுக்கு கூடுதலாக போலீஸாா் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா் தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல நிகழ்ச்சி, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில் கட்சிக் கொடியேற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய பிரபாகரன் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ள நிலையில், எனது அம்மா பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை சௌந்தரராஜன், செல்வப் பெருந்தகை ஆகியோருக்கு வழங்கப்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டுள்ளனா்.
தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பெண் தலைவா்களுக்கு, குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக இருக்க வேண்டும். பாஜக, திமுகவுடன் உறவு வைத்திருப்பதாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
திமுக ஒரு சந்தா்ப்பவாத கட்சி. 2026 சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் உள்ளாட்சித் தோ்தலில் இதே கூட்டணி தொடருமா, வேறு கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து, எங்களது கட்சி பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் சரியான நேரத்தில் முடிவு சொல்வாா் என்றாா் அவா்.

