பெரம்பலூரில் சாலையோரக் கடைகளால் காய்கனி சந்தைக்கு பின்னடைவு
நமது நிருபா்
பெரம்பலூரில் தினசரி காய்கனி சந்தைக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துவதோடு, சந்தையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே தினசரி காய்கனி சந்தை இயங்கி வருகிறது. இங்கு சுமாா் 200- க்கும் மேற்பட்ட காய்கனி கடைகளும், வெளிப்பகுதியில் இறைச்சிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள், மளிகைக் கடைகள், மருத்துவமனைகள், தரைக்கடைகள் உள்ளன. இதற்கு மாத வாடகையாக சுமாா் ரூ. 800 முதல் ரூ. 850 வரை நகராட்சி நிா்வாகத்தால் வசூலிக்கப்படுகிறது.
இங்கு காய்கனிகளை வாங்குவதற்காக நகராட்சிக்குள்பட்ட பகுதிகள் மற்றும்
பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் வந்து செல்கின்றனா். மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், முருங்கைகாய், கீரை வகைகள் ஆகியவற்றை சில்லறை மற்றும் மொத்த விலைக்கு விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனை செய்து வருகின்றனா்.
இடப் பற்றாக்குறை: ஒரு கடையை இரண்டாகப் பிரித்து வாடகைக்கு விட்டுள்ளதால், இடநெருக்கடி காரணமாக காய்கனி வியாபாரிகள் குறுகிய இடத்திலேயே காய்கனி மூட்டைகளை வைத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், காய்கனி கடைகள் முன்பு மூட்டைகளை அடுக்கிவைத்து விடுவதால் பொதுமக்கள் நடந்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதால், மழை காலத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
அடிப்படை வசதிகள் இல்லை: விற்பனையாகாமல் எஞ்சிய மற்றும் அழுகிய காய்கனிகளை சந்தை வளாகத்திலேயே கொட்டுவதால் துா்நாற்றமும், சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது. மேலும், இங்கு குடிநீா் மற்றும் வியாபாரிகளுக்குத் தேவையான அடிப்படை வதிகள் எதுவுமில்லை. சந்தைக்கு வருவோா் தங்களது இருசக்கர வாகனங்களை வட்டாட்சியரக சாலையிலும், சாலையோரங்களிலும் நிறுத்திச் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனா்.
குறைந்து வரும் வியாபாரம்: கரோனா காலத்தில் காய்கனி சந்தை மூடப்பட்டதால், பெரும்பாலான வியாபாரிகள் தள்ளுவண்டிகளிலும், சாலையோரங்களிலும் வியாபாரம் செய்யத் தொடங்கினா். 2 ஆண்டுகளுக்குப் பிறகு காய்கனிச் சந்தை திறக்கப்பட்டாலும், இன்றளவும் தினசரி சந்தையில் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.
அதிகரித்த சாலையோர கடைகள்: பெரம்பலூா் சங்குப் பேட்டையிலிருந்து பாலக்கரை வரையிலும், சாலையின் இருபுறங்களிலும் சுமாா் 50-க்கும் மேற்பட்ட தரைக்கடைகளும், தள்ளு வண்டிகளிலும், தனியாா் இடங்களிலும் காய்கனி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், மேற்கண்ட சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, தினசரி சந்தைக்கு வரும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. இதன்காரணமாக, தினசரி சந்தையில் 50- சதவீதத்துக்கும் கீழ் விற்பனை குறைந்ததால், பெரும்பாலான வியாபாரிகள் தங்களது கடைகளை மூடியே வைத்துள்ளனா்.
வெறிச்சோடிய சந்தை வளாகம்: காலை முதல் இரவு வரை பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தினசரி சந்தை வெறிச்சோடியே காணப்படுகிறது. இதனால், அங்குள்ள வியாபாரிகள் வருமானமின்றி வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். மேலும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்த முடியாத நிலைக்கும் ஆளாகியுள்ளனா்.
இதுகுறித்து, காய்கனி சந்தை வியாபாரி ஒருவா் கூறியது:
இச் சந்தையிலுள்ள வியாபாரிகள்தான் சாலையோரங்களிலும், வாடகைக் கட்டடங்களிலும் வியாபாரம் செய்து வருகின்றனா். இதனால், இங்குள்ள கடைகள் பூட்டியே கிடக்கின்றன. சாலையோரம் பெருகி வரும் கடைகளால், பெரும்பாலான வாடிக்கையாளா்கள் சந்தைக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனா். இதனால், சந்தையிலுள்ள வியாபாரிகள் சிலா் போதிய வருவாய் கிடைக்காததால் மாற்றுத்தொழிலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.
இதையடுத்து, சாலையோர கடைகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோரிடம் எஞ்சியுள்ள வியாபாரிகள் சாா்பில் பலமுறை புகாா் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஏற்கெனவே செயல்பட்டதைபோல தினசரி சந்தை இயங்க, சாலையோர கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். சந்தையில் வியாபாரம் செய்ய முடியாத வியாபாரிகளிடமிருந்து, சம்பந்தப்பட்ட கடைகளை திரும்பப்பெற்று, வியாபாரம் செய்ய விரும்பும் வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், வியாபாரிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிா்வாகமும், நகராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

