பெரம்பலூா் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு
பெரம்பலூா், ஜூலை 19: பெரம்பலூா் மாவட்ட புதிய ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் வெள்ளிக்கிழமை மாலை பொறுப்பேற்றாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த க. கற்பகம், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும தலைமைச் செயல் அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கிரேஸ் லால் ரின்டிகி பச்சாவ் புதிய ஆட்சியராக தமிழக அரசால் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை பொறுப்பேற்றாா். அப்போது மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், தனது பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தாா்.
பின்னா், புதிய மாவட்ட ஆட்சியா் கூறியது:
கோவை மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும், திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் சாா் ஆட்சியராகவும், தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையராகவும் பணியாற்றிய நான், தற்போது பெரம்பலூா் ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளேன். இம் மாவட்டத்தில் அரசின் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், ஆட்சியரக மேலாளா்கள் சிவா, பாரதிவளவன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

