பெரம்பலூரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
நமது நிருபா்
பெரம்பலூா், ஜூன் 27: பெரம்பலூா் நகரில் அதிகரித்துள்ள தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா். ஆகவே, தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுத்துள்ளது.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பிரதானச் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட நாய்கள், தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதியில் செல்லும் குழந்தைகள், பொதுமக்களை துரத்திச் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனா்.
மேலும், புகா் மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள இறைச்சிக் கடைகளின் அருகே அதிகளவிலான நாய்கள் காணப்படுகின்றன. இவை சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டிச் செல்வதால் விபத்துக்குள்ளாகின்றனா். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
மேலும், நாய்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்தாததால் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெங்கடாஜலபதி நகா், எளம்பலூா் சாலை, வடக்குமாதவி சாலை, ரோஸ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் சுற்றித் திரிகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு சுமாா் 20-க்கும் குறைவானவா்கள் நாய்க்கடியால் பாதிப்புக்குள்ளாகி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை வந்தனா். தற்போது, நாள் ஒன்றுக்கு சுமாா் 70-க்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். தனியாா் மருத்துவமனைகளில் நாய் கடிக்கு மருந்து இல்லாததால், பாதிக்கப்படும் நபா்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வதாக மருத்துவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து நகர மக்கள் சிலா் கூறியது: அதிகாலையில் நடைப் பயிற்சி செல்வோா் அச்சத்துடனே செல்கின்றனா். கூட்டமாக வரும் நாய்களைக் கண்டு பயந்தோடும்போது கீழே விழுந்து காயமடைகின்றனா். நாய்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு ஓடுவதால், குழந்தைகள் தெருக்களில் விளையாட முடிவதில்லை. இரவு நேரங்களில், வெளிச்சமில்லாத பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் துரத்திக் கடிக்கின்றன. நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா். நாய்களை அடிக்கக் கூடாது என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. ஆனால், அவற்றால் பாதிப்பு ஏற்படும்போது என்ன செய்வதெனத் தெரியவில்லை. ஆகவே, நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்டிச் செய்தி
கிடப்பில் போடப்பட்டுள்ள
குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்
தெரு நாய்களை பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்யும் திட்டம் கடந்த 2010-இல் செயல்படுத்தப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் தெரு நாய்களைப் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்து, விஷம் போக்க ஊசி செலுத்தி விடுவதற்கு நாய் ஒன்றுக்கு ரூ. 444 நகராட்சி நிா்வாகம் சாா்பில் அளிக்கப்பட்டது. இதற்கான அறுவைச் சிகிச்சை அரங்கு பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் உள்ள ரெங்கா நகரில் அமைக்கப்பட்டது. அங்கு, நாய்களைக் கொண்டு சென்று அறுவைச் சிகிச்சை செய்து, பின்னா் பிடித்த இடத்திலேயே விட்டு விடுவாா்கள். மிருகவதைச் சட்டப்படி நாய்களைக் கொல்லக்கூடாது என்பதால் ஏ.பி.சி. எனப்படும் அனிமல் பா்த் கன்ட்ரோல் முறையில் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது. ஒரு வாரம் வைக்கப்பட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட நாய்களுக்கு காதில் ஒரு அடையாளம் போட்டு பிடித்த இடத்திலேயே விடப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

