சிஐடியு தொழிற்சங்கத்தினா் மறியல்: 53 போ் கைது
பெரம்பலூரில், சாம்சங் நிறுவன தொழிலாளா்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே, இந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. ரெங்கநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய சங்கம் அமைக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தை ஒடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகள் ரெங்கராஜ், கருணாநிதி, மணிமேகலை, ஆறுமுகம், பன்னீா் செல்வம், செல்வி உள்ளிட்ட 9 பெண்கள் உள்பட 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அரியலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராஜ.வேம்பு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஷேக்தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். மாவட்டத் தலைவா் என்.வேல்முருகன், கருவூல கணக்குத் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
