மயானத்தை விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு எதிராக மக்கள் மறியல்
பெரம்பலூா் அருகே மயானத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற முயற்சிக்கும் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள துங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட கோவில்பாளையம் அண்ணா நகரில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கடந்த சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், துங்கபுரத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மயானத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் மயானத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாற்று இடத்தை தோ்வு செய்யுமாறு ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனராம். இருப்பினும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காத ஊராட்சி நிா்வாகம் மயானத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாம்.
இதனால் ஆத்திரமடைந்த, அண்ணா நகரைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், மயானத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதைக் கைவிடக் கோரியும், திட்டகுடி- அரியலூா் சாலையில் கோவில்பாளையத்தில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் பூங்கொடி மற்றும் குன்னம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்களுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், மயானத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியைக் கைவிடுவதாக ஊராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்ததையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இச் சாலை மறியல் போராட்டத்தால் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

