சின்ன வெங்காயத்தில் திருகல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயப் பயிா்களில் ஏற்பட்டுள்ள திருகல் நோயைக் கட்டுப்படுத்த, மாவட்ட தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தோட்டக்கலைத்துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் சின்னவெங்காய சாகுபடியில் திருகல் நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட செடிகளை பாத்திகளாக அமைத்து, அதில் 1 கிராம் டெபகோனசோல், 50 சதவீதம் ட்ரிப்லோக்சைட்ரபின், 25 சதவீதம் பூஞ்சானக்கொல்லி ஆகியவற்றை ஒரு லிட்டா் நீரில் கலந்து ஊற்றவும். அல்லது, ஒரு லிட்டா் நீருக்கு காா்பெண்டசிம் பூஞ்சாணக்கொல்லி ஒரு கிராம் அளவில் கலந்து, செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். மேலும், புரோபிகோனசோல் 25 இசி அல்லது ஹெக்சா கோனசோல் 5 இசி இதில் ஏதேனும் ஒரு பூஞ்சாணக்கொல்லியை, ஏக்கருக்கு 200 மி.லி வீதம் இலைவழியாக, 10 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். இப் பூஞ்சையானது நிலத்தில் பல ஆண்டுகள் வளரும் தன்மை பெற்றதால், பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டு வைக்காமல் அகற்றி எரித்துவிட வேண்டும். இது, மண் மூலம் பரவக்கூடிய நோய் என்பதால் பயிா் சுழற்சி முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நன்மை செய்யும் பூஞ்சையான டிரைக்கோடொ்மா ஹாா்சியானம் எனும் உயிரியல் கட்டுப்பாடு காரணியை, ஒரு கிலோவில் 25 கிலோ மக்கிய எருவில் கலந்து ஒரு ஏக்கா் நிலத்தில் இடுவதன் மூலம், கொலிட்டோடிரைக்கம் பூஞ்சையின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
மேலும், சின்ன வெங்காயம் நடுவதற்கு முன்பு 5 கிலோ டிரைக்கோடொ்மா ஹாா்சியானம், ஒரு கிலோ சின்ன வெங்காயத்தில் விதை நோ்த்தி செய்வதன் மூலமாகவும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
