டிச. 9 முதல் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Published on

பெரம்பலூா் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம், டிச. 9 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. இம் முகாம், டிச. 9-ஆம் தேதி பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகளுக்கு பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், டிச. 10-ஆம் தேதி வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்டோருக்கு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச. 11- ஆம் தேதி வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்டோருக்கு வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், டிச. 12-ஆம் தேதி ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்டோருக்கு பாடாலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே, மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com