மீண்டும் நிரம்பியது குரும்பலூா் ஏரி
பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் 2-ஆவது முறையாக குரும்பலூா் ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.
பெரம்பலூா் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையால் ஏரி, குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. இதில், ஆய்க்குடி, பெருமத்தூா், அரும்பாவூா் சித்தேரி, பெரிய ஏரி, வெங்கலம், வெண்பாவூா் ஆகிய ஏரிகள் 100 சதவீதக் கொள்ளளவை எட்டியதால் அண்மையில் நிரம்பி வழிந்தன.
இந்நிலையில், புதன்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் குரும்பலூா் ஏரி 100 சதவீத கொள்ளளவை எட்டியதால் வியாழக்கிழமை அதிகாலை நிரம்பி வழிந்தது. குரும்பலூா் ஏரியானது, கடந்த அக்டோபா் மாதம் பெய்த பலத்த மழைன்போது முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், 2 ஆவது முறையாக தற்போது நிரம்பியுள்ளது.
மழை அளவு:
பெரம்பலூா் மாவட்டத்தில், புதன்கிழமை காலை 6.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 6.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): பெரம்பலூா்- 17, எறையூா், வி.களத்தூா் தலா - 2, கிருஷ்ணாபுரம்- 22, தழுதாழை- 67, வேப்பந்தட்டை- 46, அகரம் சீகூா்- 3, பாடாலூா்- 7, செட்டிக்குளம் 16 மில்லி என, மொத்தம் 182 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

