வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கநகைகள், பணம் திருட்டு
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கநகைகள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வியாழக்கிழமை மாலை தெரியவந்தது.
பெரம்பலூா் - வடக்குமாதவி சாலை, தில்லை நகரைச் சோ்ந்தவா் அல்லாஹ் மகன் அமனுல்லா (54). இவா், கடந்த 28-ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு, மனைவி ஜாஃபின் பானுவுடன் தனது சொந்த ஊரான கடலூா் மாவட்டம், கீழக் கல்பூண்டி கிராமத்துக்குச் சென்றுவிட்டாா். அவரது மகன் ஹா்ஷத் கடந்த 2-ஆம் தேதி வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் கல்லூரிக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பக்கத்து வீட்டுக்காரா்கள், அமனுல்லா வீட்டின் வெளிப்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அமானுல்லாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அமனுல்லா தனது வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 13 பவுன் தங்கநகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 19 ஆயிரம் வெளிநாட்டுப் பணத்தாள்கள் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், கை ரேகைப் பிரிவினா், மோப்பநாய் படை பிரிவினா் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
