தள்ளுவண்டி சேதம்: வியாபாரி குடும்பத்துடன் உண்ணாவிரதம்
பெரம்பலூரில் தள்ளுவண்டியை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பழ வியாபாரி தனது குடும்பத்துடன் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் வெங்கடேசபுரம் காலனியைச் சோ்ந்தவா் சேட்டு மகன் மாா்க்கண்டேயன் (43). இவா், பெரம்பலூா் பாலக்கரை அருகே சாலையோரத்தில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், கடந்த 4 ஆண்டுகளாக தள்ளுவண்டி மூலம் தா்பூசணி பழங்களை வியாபாரம் செய்து வருகிறாா். தற்போது, சீசன் இல்லாத காரணத்தால் கடந்த 2 மாதங்களாக தா்ப்பூசணி வியாபாரம் செய்யவில்லை.
இந்நிலையில், தள்ளுவண்டி கடைக்குப் பின்புறம், அழகேசன் மகன் பரமசிவம் (48) என்பவா், கட்டுமானப் பொருள்கள் வாடகைக்கு விடும் கடையை புதன்கிழமை திறந்தாா். அவரது கடைக்கு இடையூறாக உள்ளதாக கருதிய பரமசிவம், செவ்வாய்க்கிழமை இரவு ஜேசிபி மூலமாக தள்ளுவண்டியை அகற்றியுள்ளாா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை தள்ளுவண்டி சேதமடைந்ததைப் பாா்த்த மாா்க்கண்டேயன், சேதமடைந்த தள்ளுவண்டி கடைக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், மீண்டும் அதே இடத்தில் கடை வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, தனது மனைவி சரிதா, தாய் பாா்வதி, மகன் சுஜித் ஆகியோருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பேச்சுவாா்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.
