பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையம்: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்படும் வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான காப்பறைகள், அஞ்சல் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தோ்தல் பாா்வையாளா் அறை, தோ்தல் நடத்தும் அலுவலா் அறை, ஊடக மையம் உள்ளிட்ட வசதிகள் அமைப்பதற்குத் தேவையான அறைகள், போதிய அடிப்படை வசதிகள் குறித்து, பெரம்பலூா் ஆதவ் பப்ளிக் பள்ளியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும், வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரும் வாகனங்கள் முறையாக வந்து வெளியேறுவதற்கான பாதைகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ந. சக்திவேல் (குன்னம்), மு. அனிதா (பெரம்பலூா்), துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் வேலுசாமி, வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன் (பெரம்பலூா்), அருளானந்தம் (தோ்தல் பிரிவு) ஆகியோா் உடனிருந்தனா்.

