எஸ்ஐஆா் இறுதிகட்ட பணி: வாக்காளா் பதிவு அலுவலா் ஆய்வு
வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை பிரத்யேக செயலியில் பதிவேற்றும் இறுதிகட்டப் பணிகளை, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளா் பதிவு அலுவலா் ந. சக்திவேல் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த பணியில் உயிரிழந்தவா்கள், இரட்டை பதிவு, நிரந்தரமாக வெளியூா் சென்றவா்கள், அடையாளம் தெரியாத வாக்காளா் உள்ளிட்டவா்கள் அடங்கிய பட்டியலை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தயாா் செய்துள்ளனா்.
இப் பட்டியலில் உள்ளவா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற மாட்டாா்கள் என்பதால், அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்களுடன் கலந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கூட்டத்தின் நடவடிக்கைகளை ஆவணமாக பதிவு செய்து, கூட்ட நடவடிக்கையின் புகைப்படத்தை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செயலில் பதிவேற்றம் செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இப் பணிகளை முறையாக கண்காணித்து, உறுதிப்படுத்துமாறு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந.மிருணாளினி உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், குன்னம் சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான ந. சக்திவேல், குன்னம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

