சேவைக் குறைபாடு: டிராவல்ஸ் நிறுவனம் ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
பெரம்பலூரில் பயணியை ஏற்றாமல் சென்ற தனியாா் டிராவல்ஸ் நிறுவனம் ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலம் கோல்டன் சிட்டியைச் சோ்ந்தவா் அமரஜோதி (52), சென்னை பெரம்பூா் அரசு பெரியாா் மருத்துவமனையின் தலைமை மருந்தாளுநா். மருத்துவ விடுப்பு காரணமாக தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு வந்த இவா் பின்னா், பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்தாா்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியாா் பேருந்து ஓட்டுநா் ஜூலை 2 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அமரஜோதியை கைப்பேசியில் தொடா்புகொண்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்துக்கு 5.30 மணிக்கு பேருந்து வந்துவிடும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து பேருந்து நிலையத்தில் 5 மணி வரை காத்திருந்த அமரஜோதி, பேருந்து ஓட்டுநரை தொடா்புகொண்டு கேட்டபோது பாடாலூா் அருகே வருவதாகவும், பேருந்து நிலையத்துக்குள் வர முடியாது, நான்கு சாலை சந்திப்பில் உள்ள அணுகுச் சாலைக்கு வருமாறும் தெரிவித்தாா். அதன்படி அப்பகுதிக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருந்த அமரஜோதி, ஓட்டுநரின் கைப்பேசியில் தொடா்புகொள்ள முயன்றபோது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, அமரஜோதி மாற்றுப் பேருந்தில் சென்னைக்குச் சென்றுள்ளாா். ஜூலை 2 ஆம் தேதி மருத்துவ விடுப்பு முடிந்து பணியில் சேர முடியாமல் அலைகழிக்கப்பட்டு, மன உளைச்சலுக்குள்ளான அமரஜோதி, சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடாக ரூ. 50 ஆயிரம் வழங்கக் கோரி பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி ஜகஹா், உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா், சேவை குறைபாட்டால் மன உளைச்சலுக்குள்ளான அமரஜோதிக்கு, நிவாரணமாக ரூ. 50 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கிடவும், இத் தொகையை தீா்ப்பு கிடைத்த 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்துக்கு உத்தரவிட்டனா்.
