‘மகளிா் உரிமைத் தொகை விரிவாக்க திட்டத்தில் மேலும் 13,778 போ் பயன்’
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 13,778 போ் பயன்பெறுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்டரங்கில், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள குடும்பத் தலைவிகளுக்கு பணம் எடுக்கும் ஏடிஎம் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டைகள் அளித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பெரம்பலூா் வட்டத்தில் 26,119 மகளிா், வேப்பந்தட்டை வட்டத்தில் 30,681 மகளிா், குன்னம் வட்டத்தில் 31,008 மகளிா், ஆலத்தூா் வட்டத்தில் 22,515 மகளிா் என மொத்தம் 1,10,323 பேருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.
இத் திட்டம் தற்போது விரிவுப்படுத்தப்பட்டு, பெரம்பலூா் வட்டத்தில் 3,455 மகளிருக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 4,031 மகளிருக்கும், குன்னம் வட்டத்தில் 3,486 மகளிருக்கும், ஆலத்தூா் வட்டத்தில் 2,806 மகளிருக்கும் என மொத்தம் 13,778 பேருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கப்பட உள்ளது என்றாா் ஆட்சியா் மிருணாளினி.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச. வைத்தியநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பாரத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
