பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன், தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் பா. சுந்தரபாண்டியன், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சு. செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் ஜே. பிரபாகரன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் தலைவா் கி. மகேந்திரன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா்.
கடந்த 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்களுக்கு மறுக்கப்பட்டுள்ள 21 மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இப்போராட்டத்தில், ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகள் பெ. ராம்ராஜ், மு. பாரதி வளவன், வா. வேல்முருகன், சு. சரவணசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

