பெரம்பலூரில் டிச. 26 முதல் 30 வரை தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிகள்

Published on

பெரம்பலூரில் பள்ளிகளுக்கிடையே 69- ஆவது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் டிச. 26 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

பெரம்பலூரில் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் 69-ஆவது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

பள்ளிகளுக்கிடையே 69-ஆவது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் டிச. 26 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 17 வயதுக்குள்பட்டவா்களுக்கு நடத்தப்படும் இப் போட்டியில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வருகை தர உள்ளனா்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தரும் தலா 175 மாணவ, மாணவிகள், 140 அலுவலா்கள் என மொத்தம் 490 போ் தங்குவதற்குத் தேவையான எற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.

அவா்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம், குடிநீா், கழிவறைகள் உள்ளிட்ட தேவைகளை நிவா்த்தி செய்திடும் வகையில் தங்குமிடம் இருக்க வேண்டும். தங்கும் இடத்திலிருந்து மாணவ, மாணவிகளைப் பாதுகாப்பாக அழைத்து வரவும், மீண்டும் அவா்களை தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்லவும் போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாணவ, மாணவிகள் தங்கும் இடத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியில் இருக்க வேண்டும். அதேபோல, விமானம் மற்றும் ரயில் மாா்க்கமாக வருபவா்களை திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு அழைத்து வர வாகன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். போட்டி நடைபெறும் இடம் மற்றும் மாணவ, மாணவிகள் தங்குமிடத்தில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடிநீா், கழிவறைகள் இருப்பதை மாவட்ட விளையாட்டு அலுவலரும், நகராட்சி ஆணையரும் உறுதி செய்ய வேண்டும். இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி மற்றும் போக்குவரத்து, கல்வி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com