ஒளவையாா் விருதுபெற மகளிருக்கு அழைப்பு
தமிழக அரசால் 2025-26-ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் ஒளவையாா் விருதுபெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிருக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம், ஆண்டுதோறும் மாா்ச் 8-ஆம் தேதி சா்வதேச மகளிா் தினத்தன்று, பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் மகளிருக்கு ஒளவையாா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான இவ்விருது பெறுவோருக்கு ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்விருது பெற விரும்புவோா் தங்களது விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, ட்ற்ற்ல்ள்;//ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் டிச. 31 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்ட வராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூகச் சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிராக இருக்க வேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்தபிறகு, அனைத்து ஆவணங்களையும் மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு கையேடாக தயாரித்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பவேண்டும். மேலும் தகவல்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை நேரில் அல்லது 04328-296209 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
