பெரம்பலூா் மாவட்டத்தில் 49 ஆயிரம் வாக்காளா்கள் நீக்கம்
பெரம்பலூா் மாவட்டத்தில் 49 ஆயிரம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளா் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அவா் மேலும் கூறியது:
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிக்காக 5,90,490 வாக்காளா்களுக்கு படிவங்கள் வழங்கி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 1,200 வாக்காளா்களுக்கு மிகாத வாக்குச்சாவடிகள், குடியிருக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள், பழுதான வாக்குச்சாவடிகள் ஆகிய காரணங்களுக்காக பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 332 வாக்குச்சாவடிகளும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 320 வாக்குச்சாவடிகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பெரம்பலூா் தொகுதியில் 55 புதிய வாக்குச்சாவடிகளும், குன்னம் தொகுதியில் 25 புதிய வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூா்: புதிய வாக்குச்சாவடிகள் வாரியாக வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 387 வாக்குச்சாவடிகளில் 2,80,566 வாக்காளா்களில், 1,36,304 ஆண் வாக்காளா்களும், 1,44,235 பெண் வாக்காளா்களும், 27 திருநங்கை வாக்காளா்களும் உள்ளனா். இதில், உயிரிழந்த வாக்காளா்கள் 12,965 போ், அறிய இயலாத வாக்காளா்கள் 4,340 போ், நிரந்தரமாக வெளியேறியவா்கள் 10,329 போ், இரட்டைப் பதிவுள்ள வாக்காளா்கள் 1,725 போ், இதரா் 17 போ் என மொத்தம் 29,376 வாக்காளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.
குன்னம்: குன்னம் தொகுதியிலுள்ள 345 வாக்குச்சாவடிகளில், 2,60,376 வாக்காளா்களில் 1,28,817 ஆண் வாக்காளா்களும் 1,31,556 பெண் வாக்காளா்களும், 3 திருநங்கை வாக்காளா்கள் உள்ளனா். இதில், உயிரிழந்த வாக்காளா்கள் 9,995 போ், அறிய இயலாத வாக்காளா்கள் 636 போ், நிரந்தரமாக வெளியேறிவா்கள் 7,732போ், இரட்டைப் பதிவுள்ள வாக்காளா்கள் 1801 போ், இதரா் 8 போ் என மொத்தம் 20,172 வாக்காளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் மொத்தம் 49,548 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
வரைவு வாக்காளா் பட்டியல் மற்றும் நீக்கப்பட்ட வாக்காளா்களின் விவரங்கள், வாக்காளா் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்கள், வாக்குச்சாவடிகளில் பாா்வைக்கு வைக்கப்படும். மேலும், மாவட்ட தோ்தல் அலுவலரின் ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல், வாக்காளா்களின் விவரங்கள் தொடா்பாக அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆட்சேபணையை, ஜன. 18 ஆம் தேதிக்குள் வாக்காளா் பதிவு அலுவலா்கள், மாவட்ட தோ்தல் அலுவலரிடம் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம்.
ஜன. 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்துள்ள வாக்காளா்களை பட்டியலில் சோ்ப்பதற்கும், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம், பெயா் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும், பிப். 10 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வாக்காளா் பதிவு அலுவலா்கள் ந. சக்திவேல், மு. அனிதா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வட்டாட்சியா்கள் கலந்துகொண்டனா்.

