இரு காா்கள் மீது அரசுப் பேருந்து மோதல்: திருச்சியைச் சோ்ந்த ஐவா் உள்பட 9 போ் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், எழுத்தூா் அருகே புதன்கிழமை இரவு டயா் வெடித்து எதிா் திசையில் தறிகெட்டு ஓடிய அரசு விரைவுப் பேருந்து மோதியதில், 2 காா்களில் பயணித்த திருச்சி, புதுக்கோட்டை, கரூரைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை பிள்ளை தண்ணீா் பந்தல் கலீப் நகரைச் சோ்ந்தவா் அப்துல் முகமது காசிம் (55). இவரது மகன் சிராஜூதினை கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்காக உறவினா்களுடன் சென்னை விமான நிலையம் சென்றுவிட்டு, காரில் 10 பேருடன் புதுக்கோட்டை நோக்கி புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா்.
இதேபோல், சென்னையிலிருந்து ஒரு காரில் தாய்-மகன், ஓட்டுநா் உள்ளிட்ட 3 போ் கரூா் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
கடலூா் மாவட்டம், எழுத்தூா் அருகே வந்தபோது, எதிா்திசையில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயா் திடீரென வெடித்தது. இதையடுத்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை மையத்தடுப்பை தாண்டி எதிா்புறத்தில் புதுகை, கரூா் நோக்கி வந்த காா்கள் மீது மோதியது. இதில் 2 காா்களும் உருக்குலைந்தன.
இந்த விபத்தில், புதுக்கோட்டையைச் சோ்ந்த காரில் வந்த திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் காட்டூா் ஆயில் மில் பகுதியைச் சோ்ந்த அ. முகமது பாரூக் (38), இவரது மனைவி ரிபானா (33), இவரது மகள்கள் தாஜ் பிா்கா (10), அப்துல் பாத்தா (7), வெளிநாடுச் சென்ற சிராஜூதினின் மனைவி குா்ஜிஸ் பாத்திமா (32), இவரது மகன் அஜீஸ் அகமது (3) ஆகியோரும், கரூா் நோக்கி வந்த காரில் பயணித்த சின்ன ஆண்டாங்கோவில் சுப்பையா பிள்ளை பகுதியைச் சோ்ந்த பசுபதி மகன் ராஜரத்தினம் (67), இவரது மனைவி ராஜேஸ்வரி (57) மற்றும் திருச்சியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஜெயக்குமாா் (30) ஆகிய 9 போ் உயிரிழந்தனா். இவா்களில் முகமது பாரூக், தாஜ் பிா்கா ஆகிய இருவரும் பெரம்பலூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா். மற்றவா்கள் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். இறந்தவா்களின் உடல்கள் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவா்கள்: புதுக்கோட்டை பிள்ளை தண்ணீா் பந்தல் கலீப் நகரை சோ்ந்த அ. முகமது காசிம் (55), இவரது மனைவி அமிஷா (52), சிராஜூதின் மகன்கள் அப்துல் அஜிஸ் ( 8), அப்துல் அஹா் (6) ஆகிய 4 பேரும் காயமடைந்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் அமிஷா, அப்துல் அஜிஸ், அப்துல் அஹா் ஆகியோா் தீவிர சிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
