டிச. 29 முதல் பெரம்பலூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாம்

Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் டிச. 29 ஆம் தேதி முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்கள்,4 பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் 1.19 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு, தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8 ஆவது சுற்று கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் டிச. 29 முதல் ஜன. 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம் முகாம்களில், விடுபட்ட கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

4 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கறவை, சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் எருதுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இத் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்துவதற்கு முன், அனைத்து கால்நடைகளுக்கும் தனித்துவ 12 இலக்கு எண்கொண்ட காதுவில்லை அணிவித்து, கால்நடை தொடா்பான விவரங்களை பாரத் பாசுதான் போா்டலில் பதிவேற்றம் செய்யப்படுவது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, கால்நடை பராமரிப்புத் துறையினா் தங்கள் கிராமத்துக்கு தடுப்பூசி செலுத்தும் பணிக்கு வரும்போது, தங்களது கால்நடைகளுக்கு, அடையாள காதுவில்லை பொருத்தி 100 சதவீத கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி மேற்கொண்டு கால்நடை வளா்ப்போா் பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com