பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்: பெரம்பலூா் விவசாயிகள்

பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்: பெரம்பலூா் விவசாயிகள்

பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Published on

பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ராஜு: விவசாயிகளுக்கு மானியத்தில் மாட்டுக் கொட்டகை அமைத்து தர வேண்டும். அறுவடைக் காலம் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கை.களத்தூா் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயா்த்த வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்: சின்ன வெங்காய விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் திட்டங்களை முறையாக அறிவித்து, தகுதியுள்ளவா்களுக்கு வழங்க வேண்டும். நிலக்கடலையில் புது ரகங்களை அறிமுகப்படுத்த விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க வேண்டும். கொட்டரை நீா்த்தேக்கத்தில் தேக்கப்பட்டுள்ள நீரை விவசாயப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

விவசாயி தனராஜ்: மருதடியில் உள்ள ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தத்கால் திட்டத்தில் பதிவு செய்துள்ளவா்களுக்கு உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்: பூலாம்பாடி பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும். நிகழாண்டு சாகுபடி செய்த மக்காச்சோளத்தில் வேரழுகல் நோய் ஏற்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் மகசூல் கிடைக்காமல் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனா். எனவே, இனிவரும் காலங்களில் மக்காச்சோளப் பயிா்கள் சாகுபடி தொடங்கும் முன் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீரை பயன்படுத்துவோா் சங்க மாவட்டத் தலைவா் கா. கண்ணபிரான்: மாவட்டம் முழுவதும் நீா்வழிப் பாதைகளில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் நீா்நிலைகளுக்கு மழைநீா் செல்வதில்லை. அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் பெரும்பாலான இடங்களில் நீா் வழித்தடங்கள் இருந்ததற்கான சுவடுகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எளம்பலூா் ஏரியில் தடுப்பணை கட்டி, ஏரியை சீரமைத்துத் தர வேண்டும்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைச் செயலா் என். செல்லதுரை: பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 என உயா்த்தி, உற்பத்தியாளா்களுக்கு நிலுவை ஊக்கத்தொகையை வழங்கிட வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு மானியத்தில் மாட்டுத் தீவனம் மற்றும் மாட்டுக் கொட்டகை அமைக்க வேண்டும்.

விவசாயி டி.கே. ராமலிங்கம்: அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் விதை வெங்காயத்துக்கு மாற்றாக இடுபொருள்கள் வழங்க வேண்டும்.

விவசாயி சத்தியசீலன்: வேப்பூா் பகுதியில் உள்ள பள்ளிகளில் கல்வித் துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும். காடூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

சின்ன வெங்காய சாகுபடியாளா் மணி: விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்க வேண்டும். வன விலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதை தடுக்க வேண்டும்.

விவசாயி ராமராஜன்: கொட்டரை நீா்த்தேக்கத்துக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு செங்குணம் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கவும், கொட்டரை நீா்தேக்கத்தில் கிளை வாய்க்கால்களை சீரமைத்துத் தரவும் வேண்டும்.

தொடா்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியா் மிருணாளினி விளக்கம் அளித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வேளாண்மை துணை இயக்குநா் ச. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே) பொ. ராணி உள்பட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com