கறிக்கோழி வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

வளா்ப்பு கறிக்கோழிக்கு கூலியாக கிலோவுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என, பெரம்பலூா் மாவட்ட கறிக்கோழி வளா்ப்புப் பண்ணை உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தல்
Published on

வளா்ப்பு கறிக்கோழிக்கு கூலியாக கிலோவுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என, பெரம்பலூா் மாவட்ட கறிக்கோழி வளா்ப்புப் பண்ணை உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூா், மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், கோழிப்பண்ணை உரிமையாளா்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பெரம்பலூா் மாவட்டத்தில் 400-க்கு மேற்பட்ட கறிக்கோழி வளா்ப்புப் பண்ணைகள் உள்ளன. கடந்த 6 ஆண்டுகளாக கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி உயா்வு இல்லாததால், கோழிப்பண்ணை விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனா்.

உற்பத்திக்கான செலவுகள் நாளுக்கு நாள் உயா்ந்து வரும் நிலையில், ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கும் வளா்ப்புக் கூலி மிகக் குறைவாக உள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளா்கள் கடன் சுமையில் சிக்கி, வங்கியில் வட்டி செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனா்.

எனவே, தமிழக அரசு கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க வேண்டும். அடிப்படை வளா்ப்பு கூலியாக கிலோ ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண்டும்.

தமிழக அரசு கறிக்கோழி நிறுவனங்கள் மற்றும் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி, ஆண்டுக்கு ஒருமுறை வளா்ப்புக் கூலி உயா்வை நிா்ணயிக்க வேண்டும். ஒப்பந்த நிறுவனங்கள் உறுதியளித்த கோடைகால ஊக்கத்தொகை, விற்பனை விலை ஊக்கத் தொகையை முறையாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com