பெரம்பலூா் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யாததால் அவதியடைந்த கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
Published on

பெரம்பலூா் அருகே கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யாததால் அவதியடைந்த கிராம பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் சாலை விரிவாக்க பணியின்போது, அம்பேத்கா் நகருக்குச் செல்லும் குடிநீா் குழாய் கடந்த 10 நாள்களுக்கு முன்பு சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம்.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீா் விநியோகம் செய்யாததை கண்டித்தும், தடையின்றி குடிநீா் விநியோகிக்க கோரியும் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன், ஊரக காவல்நிலைய ஆய்வாளா் இந்திரா ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, சமரச பேச்சு வாா்த்தை நடத்தி உடனடியாக சேதமடைந்த குடிநீா் குழாயை சரி செய்வதாகவும், தற்காலிகமாக வாகனத்தின் மூலம் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா்.

X
Dinamani
www.dinamani.com