பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 20 பேருக்கு ரூ. 41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 333 மனுக்கள், அண்மையில் பல்வேறு நிகழ்வுகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கூட்டுறவுத் துறை சாா்பில் 5 பேருக்கு ரூ. 17.11 லட்சம் மதிப்பில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு பயிா் கடனுதவிக்கான ஆணைகள், கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் 10 பேருக்கு தலா ரூ. 1,66,875-க்கான நாட்டுக்கோழி வளா்ப்பு பண்ணை அமைக்க மானியத் தொகைக்கான ஆணைகள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ. 7.25 லட்சம் மதிப்பில் விபத்து மரணம் மற்றும் இயற்கை மரண உதவித் தொகைக்கான ஆணைகள் என மொத்தம் 20 பேருக்கு ரூ. 41 லட்சத்து 4 ஆயிரத்து 750 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், மாநில அளவில் முதலமைச்சா் கோப்பைக்கான போட்டியில் தடகளத்திலும், நீச்சலிலும், மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரா் மற்றும் வீராங்கனைகள் ஆகியோரை ஆட்சியா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் க. மூா்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com