பெரம்பலூரில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள்
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சாா்பில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சாா்பில், ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொதுமக்களிடையே ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் அரசு இசைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய இசைக் கலைஞா்கள், பாடல்களை பாடி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரக மேலாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
