விவசாய நிலத்தில் கிரஷா் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே விவசாய நிலத்தில் புதிதாக கிரஷா் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதற்கான அனுமதியை ரத்து செய்யக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் பாண்டியனுக்கு (50), அதே கிராமத்தில் செங்குணம் ஊராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் சுமாா் 3 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் புதிதாக கிரஷா் அமைப்பதற்காக அண்மையில் பூமிபூஜை நடத்தினாராம்.
இதையறிந்த அப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் புதிதாக கிரஷா் அமைத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, இனிவரும் காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், கிரஷரிலிருந்து வெளியேறும் துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகி, கிராம மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி அண்மையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், கிரஷா் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும், விவசாய நிலங்களின் மையப் பகுதியில் புதிதாக கிரஷா் அமைப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும், செங்குணம், பேரளி, கவுல்பாளையம் ஆகிய கிராம மக்களுடன் நாம் தமிழா் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் கீா்த்திவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் அளித்து கலைந்துசென்றனா்.
