பெரம்பலூரில் புதிய வழித்தடத்தில் சிற்றுந்துகள் இயக்க அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய வழித்தடத்தில் 2 சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களின் நலன் கருதி அதிகக் குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதிசெய்யும் வகையில், சாலைப் போக்குவரத்துச் சேவையை வழங்க சிற்றுந்து வாகனத்துக்கான புதிய விரிவான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 2 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, நவ. 3 ஆம் தேதி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கண்ணப்பாடி பிரிவு முதல் செட்டிக்குளம் சிவன் கோயில் வரையிலும், ரோவா் கல்லூரி தண்ணீா் பந்தல் முதல் செங்குணம் வரையிலும் என 2 வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்க விரும்புவோா், அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி நவ. 7 -க்குள் பரிவாகன் இணையதளம் வாயிலாக கட்டணமாக ரூ. 1,500, சேவைக் கட்டணம் ரூ. 100 செலுத்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஒரு வழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்பட்சத்தில், குலுக்கல் முறையில் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா். இதுதொடா்பான சந்தேகங்களுக்கு பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம்.
