பெரம்பலூா் அருகே கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை
பெரம்பலூா் அருகே கடந்த 2018 ஆம் நடந்த கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூா் கிராமத்தைச் சோ்ந்த அரசன் மனைவி காளியம்மாள் (50). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி லதா (30). இரு குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்னையால் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் கடந்த 23.8.2018-இல் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த லதா, நல்லு மகன் ராஜேந்திரன் (57), இவரது மகன்கள் அறிவழகன் (28), காா்த்திக் (25) ஆகியோா் காளியம்மாள் கணவா் அரசனை (56) கட்டையால் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.
புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், அவா்கள் நீதிமன்றப் பிணையில் வெளியே வந்தனா்.
இவ் வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த பெரம்பலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன், குற்றவாளிகளான லதா, ராஜேந்திரன், அறிவழகன், காா்த்திக் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து மேற்கண்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
